சட்டவிரோத விகாரைகளை நோக்கி வரும் மக்களுக்கு நீதி சமாதான ஆணைக்குழு பகிரங்க கோரிக்கை

Aarani Editor
2 Min Read
IllegalRegistration

மக்களின் உரித்துக்காணிகளை கையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மதம் சார்ந்தவர்களுக்கு நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

“ஒரு பௌர்ணமி நாளில் ஒரு பகிரங்க வேண்டுகோள்” எனும் தலைப்பில் நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இயக்குனர் அருட்பணி சூ. யே. ஜீவரட்ணம் அமதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டபட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கி அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

கடந்த பங்குனி மாதம் 28ம் திகதி காணி நிர்ணய உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடைய காணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும் அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தபோது இறுதியில் அதை இரத்துசெய்தமையை வரவேற்கின்ற அதேவேளை,

இன்னும் இன மத சமூக நல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார் காணிகளுக்குள் அத்துமீறிய பௌத்தவிகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும் புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த வித அகழ்வு மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாது என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பௌத்த விகாரைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் எல்லாம் வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினை மனப்பான்மையையும் அதிகார வர்க்கம் வெளிப்படுத்துகிறது.

இதை வடமாகாண நீதி சமாதான நல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிற அதேவேளை வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரித்துக்காணிகளை கையகப்படுத்தி,

தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மத சகோதர சகோதரிகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளையும் விடுக்கிறது.

அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள் கட்டப்படுகின்ற மத தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும் அநியாயமானதும் என்பதை புரிந்து கொண்டு வட கிழக்கு மாகாணங்களில் சட்ட விரோத இடங்களில்

அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத்தலங்களை நோக்கிய தங்களின் ஆன்மீக பயணங்கள் வேதனையளிக்கிறது. நல்மனதோடு அவற்றை தவிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரித்து அவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடைய கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

அது மாத்திரம் இன்றி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடிய வளமான நிலங்கள், காணிகள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள நிலையில்,

அவற்றை எல்லாம் விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு உணரப்பட வேண்டிய சூழ்நிலையில் இப்படியான காணி அபகரிப்பு செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்த விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *