கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு பாடசாலை அதிபர்கள் எதிர்ப்பு

Aarani Editor
1 Min Read
EducationMinistry

பாடசாலைகளில் டெங்கு அல்லது சிக்குன்குன்யா நோய் பரப்பும் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலைகளின் அதிபர்கள் பொறுப்பேற்க வேண்டும் என கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு, பாடசாலை அதிபர்கள் தர நிர்ணய அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு எதிராகவும், அரசாங்கத்தின் அரச ஊழியர்களை இலக்காக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் ஜூன் 15 முதல் பாடசாலை அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தற்போது இலங்கை முழுவதும் டெங்கு நோய் படிப்படியாக அதிகரித்து, கடுமையான அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.

பல பாடசாலை மாணவர்கள் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் உட்பட எடுக்கப்படலாம் என கல்வி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்தச் சுற்றறிக்கைக்கு பாடசாலை அதிபர்கள் தர நிர்ணய அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

2025 ஜூன் 9 வரை, இலங்கை முழுவதும் 25,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், மேலும் 13 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் மேல் மாகாணத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் மிகவும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி மற்றும் காலி மாவட்டங்களும் டெங்கு பரவல் ஆபத்து மிக்க பகுதிகளாக உள்ளன.

இதற்கிடையில், நுவரெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் ஆறு தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் நுளம்பு ஒழிப்பு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *