நல்லூர் கந்தசுவாமி முன்பு LGBTQ நடைபவனி -கடுமையான கண்டனங்களை வெளியிட்ட கீதநாத்

Aarani Editor
2 Min Read
நடைபவனி

நல்லூர் கந்தசுவாமி முன்பாக LGBTQ நடைபவனி குறித்து சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

குறித்த செயற்பாடு தமிழ் கலாசாரம் மற்றும் சமய நெறிகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், குறித்த விடயத்தில் தனி நபர்களோ அமைப்புகளோ தமது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியும் எனினும் அவர்கள் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை, குறிப்பாக புனிதத் தலங்களுக்கான இடங்களில் மதிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

யாழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதுமான மற்றும் உலகளாவிய ரீதியிலான பக்தர்களின் புனிதத் தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஓரினச் சேர்க்கை மற்றும் அதுசார்ந்த தமது நம்பிக்கைகளை ஒரு குழு விளம்பரப்படுத்தும் செயல் அதிர்ச்சிகரமானதும் வெட்கக்கேடானாதுமாகும்.

இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பதுடன் குறித்த செயற்பாடுகளை அரங்கேற்றும் குழுக்களுக்கு மேலைத்தேய கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை எமது சிறுவர்கள் மீது திணிக்க முற்படும் ரகசிய குழுக்களால் பணம் வழங்கப்படும் ஓர் ரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது.

அண்மையில் நல்லூர் புனிதப் பிரதேசத்தில் மாமிச உணவுகளை விற்பனை செய்யும் ஓர் உணவகம் ஒன்றிற்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல்கொடுத்ததன் காரணமாக குறித்த உணவகம் சைவ உணவினை பரிமாறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

எனினும் குறித்த உணவகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய அனைவரும் தமிழ் கலாசாரம் சீரழிக்கப்படும் இவ்விவகாரத்தில் மெளனம் காப்பது வருத்தமளிக்கிறது.

குறித்த மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது கலாசார மற்றும் புனிதப் பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் இக்குழுவினரும் ஒரு சமூகத்தின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை மதிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இது போன்ற கலாசார சீரழிவு நடக்கும் பொழுது நாம் மௌனித்து இருக்க நாம் எந்த ஒரு அமைப்பிடமும் விலை போகவில்லை.

தமிழ் கட்சிகள் இதனை கண்டிக்க தவறினால் எமது அடுத்த தலைமுறை சீர்கெட்டு விடும்.

உண்மையான மற்றும் உணர்வுபூர்வமான மாற்றுப்பாலினத்தவர்கள் வானவில் சமூகத்துடைய செயற்பாடுகளுக்கு அப்பால் இருந்துவருவதே நிதர்சனமாகும் எனும் நிலையில், இ‌‌ந்த சீர்கேட்டை கண்டிக்கத் தவறிவிட்டு உணவகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது அர்த்தமற்ற ஒரு செயற்பாடாகும் எனத் அவர் தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *