இரு முக்கிய விதிமுறைகளை மாற்றியமைத்த ஐசிசி

Aarani Editor
2 Min Read
ICC Cricket

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் 2 முக்கிய விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது.

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தற்போது 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதாவது, ஒவ்வொரு முனையிலிருந்தும் பந்து வீசும் போது, வெவ்வேறு பந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியே தற்போது நடைமுறையில் உள்ளது.

இதன்படி, ஒரு பந்து ஒரு இன்னிங்ஸில் 25 ஓவர்கள் வீசுவதற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் குறித்த விதியில் தற்போது மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இதற்கமைய இனிவரும் காலங்களில் இன்னிங்ஸின் முதல் 34 ஓவர்கள் வரை மாத்திரமே 2 வெவ்வேறு பந்துகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 16 ஓவர்களுக்கு இரண்டு பந்துகளில், ஒரே பந்து மாத்திரமே முழுமையாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு அதிகளவில் சாதகமான அம்சங்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த விதிமுறையில் மாற்றம் மேற்கொண்டுள்ளது.

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்த விதிமுறை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் கொன்கஷன் சப்ஸ்டிட்யூட் என்ற மாற்று வீரர்கள குறித்த விதிமுறைகளிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் 5 கொன்கஷன் சப்ஸ்டிட்யூட் என்ற மாற்று வீரர்கள் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக ஒரு விக்கெட் காப்பாளர், ஒரு துடுப்பாட்ட வீரர், ஒரு வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சகலதுறை ஆட்டகாரர் என ஒவ்வொரு அணியும் மாற்று வீரர்களை அறிவிக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு வீரருக்குப் போட்டியில் விளையாடமுடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், அவருக்குப் பதிலாகக் குறித்த ஐந்து பேரில் ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.

இந்த விதிமுறை ஜூன் 17 ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டிகளிலும், ஜூலை 2 ஆம் திகதி முதல் ஒரு நாள் போட்டிகளிலும், ஜூலை 10 ஆம் திகதி முதல் இருபதுக்கு 20 போட்டிகளிலும் நடைமுறைக்கு வரும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *