பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பொலிசாரால் வெளிப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன்இ அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும்.
அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை என்பது மிகவும் உணர்திறன் மிக்க விடயம் என கூறிய அமைச்சர, பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும் உள்ளதாகவும் வலியுறுத்தினார்.
அத்துடன், விசாரணைகள் முறையாக இடம்பெறுவதாகவும் அமைச்சர் உத்தரவாதமளித்தார்.
அதேவேளை, பிள்ளையானை சந்தித்து வந்ததன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து அவர் எதுவும் கூறவில்லை என உதய கம்மன்பில கூறியிருந்தமையை சுட்டிக்காட்டிய அமைச்ர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படும் போது இந்த வலையமைப்பு குறித்து அறிந்து கொள்ளமுடியும் என கூறினார்.
சிறையிலிருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது எனவும் கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளதாகவும் அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
எனவே, பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/
