இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் கல்முனை மனித உரிமைகள் பிராந்திய நிலையத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் நெறிப்படுத்தலில் குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இதன்போது, வலிந்து காணாமல் போன தமிழ் முஸ்லிம் உறவினர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக்குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்ககின்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் சட்ட ரீதியாகவுள்ள உரிமைகள் பற்றியும் இதனை பிரயோகிக்கின்ற போது ஏற்படுகின்ற சவால்கள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இது தவிர சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது தற்போதைய சூழலில் சிவில் அமைப்புக்கள் செயற்படுவதால் ஏற்படும் சவால்கள் அண்மையில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கல்முனை பிராந்திய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, தமிழ்மொழிப் பிரயோகத்தின் அவசியம் பற்றியும், பாதிக்கப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு வருகின்ற பொதுமக்களுக்கான விரைவான பரிகாரங்கள் மற்றும் வழக்கு நடைமுறையிலுள்ள சவால்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
Link: https://namathulk.com/
