அரசாங்கம் எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிட்டுள்ள புதிய திட்டத்தில், அனைத்து பிள்ளைகளுக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்கும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளதாகவும், அதனை 2026 இல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹுங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.
இதன்போது, பாடசாலைகள் பணம் அறவிடக்கூடாது என்று கூறப்பட்டாலும், அது இன்னும் நடப்பதாக முறைப்பாடுகள் வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், விரைவில் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரிக்க அமைச்சில் போதுமான விசாரணை அதிகாரிகள் இல்லை எனவும், இப்போது அந்த விசாரணைப் பிரிவை பலப்படுத்தி வருவதாகவும் பிரதமர் கூறினார்.
அதேவேளை , உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.
இந்நிலையில், பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் தனது வாழ்த்துக்களை பிரதமர் கூறினார்.
அத்துடன், சித்தியடையாக சில பிள்ளைகள் ஏற்கனவே இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில் மற்றும் சிலர் தொழில் திறன்களைப் பெறுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.
ஆனால் சில பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்ற தெளிவான நோக்கம் எதுவும் அவர்களிடம் இல்லை என கூறிய பிரதமர், இந்தக் கல்வி முறை அந்த பிள்ளைகளுக்கு ஒரு பாதையை வகுத்துத் தரவில்லை எனவும் வலியுறுத்தினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இவற்றை சரிசெய்ய அரசாங்கம் பாடுபடும் எனவும் தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
