பதுளை – பசறை வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பசறை பிரதேச சபை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் குளோரின் சிலிண்டரில் நேற்று திடீரென கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அவசரமாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலை வளாகத்தில் உள்ள உத்தியோகபூர்வ விடுதியில் தங்கியிருந்த 76 வயதுடைய பெண் ஒருவர், குளோரின் வாயுவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பசறை வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி டொக்டர் சானக தன்கந்த தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது
பசறை பிரதேச சபைக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட குளோரின் சிலிண்டர்களில் ஒன்றில் கசிவு ஏற்பட்டதாக சபையின் செயலாளர் கூறியுள்ளார்.
குளோரின் கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சிலிண்டரை பாதுகாப்பாக அகற்ற தேசிய நீர் வழங்கல் சபை மற்றும் பதுளை தீயணைப்புத் துறையின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
