நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.யு. சுமந்திரன் குற்றஞ் சாட்டினார்.
வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே அவர் இதனை கூறினார்.
இதன்போது, மக்களின் நிலங்களைத் திருப்பித் தருவதாகவும், இராணுவத்தால் கைப்பற்றப்பட்டவற்றை விடுவிப்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருப்பினும், ஆட்சிக்கு வந்ததும், நிலத்தை கையகப்படுத்த தொடங்கிவிட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முத்திரை குத்தி, நிலம் கையகப்படுத்தும் வர்த்தமானியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மே தினக் கூட்டத்திற்கு முன்னதாக, சுமந்திரன் ஒரு பேஸ்புக் பதிவில் நிலம் கையகப்படுத்தல் பிரச்சினை குறித்து அரசாங்க வர்த்தமானியை எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
அதில், 28.03.2025 திகதியிடப்பட்ட வர்த்தமானி எண் 2430 இல் நில தீர்வு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 4 இன் கீழ் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
இதில் 3 மாத காலத்திற்குள் எந்த உரிமைகோரல்களும் பெறப்படாவிட்டால் வடக்கு மாகாணத்தில் மொத்தம் 5,940 ஏக்கர் நிலம் அரசு நிலமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டியிருந்தார்
Link: https://namathulk.com/
