இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் 04 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

Aarani Editor
2 Min Read
Vietnam

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.

இதன்போது, வியட்நாம் சோசலிச குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையே சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

வியட்நாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையிலான இயந்திர உற்பத்தி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாம் விவசாய விஞ்ஞான அகாடமிக்கும் இலங்கை விவசாயத் திணைக்களத்திற்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் வியட்நாமின் இராஜதந்திர அகாடமிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்றும் வியட்நாம் வர்த்தக ஊக்குவிப்பு முகவர் நிறுவனத்திற்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளல், இராஜதந்திரிகள், நிபுணர்கள், அதிகாரிகள், வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றம் அதேபோன்று, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகழ்ச்சிகள், பல்வேறு பாடநெறிகள், கருத்தரங்குகள், இராஜதந்திரத் துறையில் ஏனைய கல்வி நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி தொடர்பான நிபுணத்துவத்தை ஒழுங்கமைக்கவும் பரிமாறிக்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் பொருத்தமான வர்த்தகத் தகவல் மற்றும் சந்தை நுண்ணறிவு பரிமாற்றம், இரு நாடுகளிலும் நடைபெறும் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் ஊக்குவிப்பு வாய்ப்புகளில் கூட்டு பங்கேற்பு மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையே சந்திப்புகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பரந்த அளவில் வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு வகையான வாய்ப்புகளை வழங்கும்.

இந்த இணக்கப்பாடுகள் ஊடாக குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், கடற்றொழில் நடவடிக்கைகள், ஆடைக் கைத்தொழில் மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட விவசாயத்திற்கு குறிப்பிடத்தக்க சந்தை வாய்ப்புகளை இரு நாடுகளுக்கும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *