பிரதமர் ஹரிணி அமரசூரிய GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளி விவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை சந்தித்தார்.
ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் க்ளீன் சிறிலங்கா திட்டம் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலின் போது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பிரதமர் குறிப்பாக வலியுறுத்தினார்.
போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்தும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட தற்போதைய சட்ட சீர்திருத்தங்கள் குறித்தும் கவனப்படுத்தினார்.
இலங்கை அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்கைகளை, குறிப்பாக GSP+ பொறிமுறையின் முக்கிய நோக்கங்களுடன் இணங்கிச்செல்லும் கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியக் குழு வரவேற்றது.
GSP+ வரிச் சலுகைகளுக்காக மீளவும் விண்ணப்பம் செய்யும் முறை குறித்த வழிகாட்டுதலை அவர்கள் வழங்கியதுடன், இலங்கையின் முறையான அபிவிருத்தி முயற்சிகளை ஆதரிப்பதற்கான தமது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினர்.
இந்த உரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பங்கேற்பு மற்றும் பெண்களின் அரசியல் மற்றும் பொருளாதார பங்கேற்பை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டது.
தொழிற்படையில் அதிக பெண்களை ஈர்க்கும் வகையில் குழந்தை பராமரிப்பு சேவைகள், முதியோர் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற ஆதரவு முறைமைகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறைகள் மூலம் இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்துவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோ அவர்கள் இதன் போது தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
