தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்.

Aarani Editor
1 Min Read
national vesak day

2569 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தினை முன்னிட்டு, தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பமாகி, வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கு இணையாக, அரச வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இன்று முதல் தொடங்கவுள்ளது.

இலங்கை முழுவதற்குமான சாசன பாதுகாப்பு மன்றம், ஜனாதிபதி அலுவலகம், பௌத்த, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகார திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து இந்த ஆண்டு அரச வெசாக் மகோற்சவத்தை ஏற்பாடு செய்கின்றன.

நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம் எனம் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச வெசாக் மகோற்சவம் வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கு இணையாக, நுவரெலியா மற்றும் பதுளை சாசன பாதுகாப்பு மன்றங்கள் இணைந்து தொடங்கிய தாய்லாந்து மகா சங்கத்தினரின் ‘சியம் இலங்கை தர்ம யாத்திரை’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று நுவரெலியா நகரில் நிறைவடையவுள்ளது.

இந்த யாத்திரை பண்டாரவளையில் இருந்து நுவரெலியா வரை நடைபெற்றது.

அத்துடன், இந்த காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் இன்னும் முடிவடையாத சில விகாரை அபிவிருத்தி திட்டங்கள் முப்படைகளின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படவுள்ளன.

இதற்கிடையில், வெசாக் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு முழுவதிலுமுள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்லும் இடங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும்.

மேலும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *