முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவை பெறச் சென்ற தாய் ஒருவருக்கு கொடுப்பணவு தர முடியாது என தபால் ஊழியர்களால் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
இன்றையதினம் (14) காலை முதியோர் கொடுப்பனவை பெற சென்ற தாயொருவர் கொடுப்பனவுக்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளார்.
பின்னர் நீண்ட நேரம் சென்ற நிலையில் கொடுப்பனவை தரும்படியாக தபால் அலுவலக உத்தியோகத்தரிடம் குறித்த தாயார் கேட்டுள்ளார்.
அங்கு நின்ற முன்னாள் தபால் அலுவலக உத்தியோகத்தரும்; நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளருமான நபரொருவர் அந்த தாயார் தமக்கு வாக்கு போட இல்லை என பல கீழ்த்தரமான வாத்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.
இதனை அடுத்து அந்த நபர் தற்போது தபால்; அலுவலக உத்தியோகத்தராக இருக்கும் நபரிடம் சென்று குறித்த தாயாருக்கு கொடுப்பனவு வழங்க வேண்டாம் என கூறி சென்றுள்ளார்.
இதன்பின் தற்போது உத்தியோகத்தராக இருக்கும் தபால் அலுவலக உத்தியோகத்தரிடம் குறித்த தாயார் சென்ற போது, முதியோர் கொடுப்பனவு அட்டையினை தூக்கி எறிந்து கொடுப்பனவை கொடுக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Link: https://namathulk.com/
