இலங்கை போக்குவரத்துச் சபை உரிய நேர அட்டவணையை பின்பற்றாமையாலேயே, கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் 23 பேரின் உயிரைக் காவுகொண்ட பஸ் விபத்து இடம்பெற்றதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விபத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெரண்டி எல்லயில் விபத்துக்கு உள்ளான அரச பஸ், அனுமதிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு உட்பட்ட பஸ் சேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் சேவையை முன்னெடுக்கத் தீர்மானித்தமைக்கான பொறுப்பினை இலங்கை போக்குவரத்துச் சபை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பல இடங்களில் அரச பேருந்துகள் உரிய நேர அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை.
2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாகவே அனைத்துப் பயணிகள் பஸ் சேவைகளின் நேர அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறு இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் கெமுனு விஜயரத்ன முன்வைத்துள்ளார்.
Link: https://namathulk.com/
