கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கொத்தாக சிக்கிய சந்தேகநபர்கள்

Aarani Editor
2 Min Read
Kalutara Shooting

காலி வீதிக்கு அருகில் இளைஞன் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரியும், அவருடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நபர் மற்றும் அவருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் மேலும் இருவரை கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 9அஅ ரக தோட்டாக்கள் 15 மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

கொட்டாவ விகாரை மாவத்தையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி விமானப்படையில் ஒன்றரை வருடம் கடமையாற்றிய விமானப்படை சிப்பாய் என பொலிசார் தெரிவித்தனர்.

கொலைக்காக துப்பாக்கிதாரி வந்த மோட்டார் சைக்கிள், கொட்டாவ மாபுல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்னால் பாகங்களாக பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில், இரண்டு போலி எண் தகடுகளுடன் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட இரண்டு நபர்கள் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ வலயத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிராஹ்மனகேயின் நேரடி மேற்பார்வையின் கீழ் கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய நாட்டில் உள்ள அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5ம் திகதி இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் தெஹிவளை, ஓர்பன் பிளேஸைச் சேர்ந்த 19 வயதுடைய பிரவீன் நிசங்க என்ற இளைஞர் ஆவார்.

இவர் கல்கிஸ்ஸ நகர சபையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் சம்பவ தினத்தன்று கல்கிஸ்ஸயில் உள்ள சில்வெஸ்டர் வீதிப் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞன் தற்போது சிறையில் உள்ள தெஹிவளை சத்துரி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் மகன் எனவும், அந்தப் பெண்ணின் மகளும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *