வவுனியாவில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு – அதிரடிப்படை வீரர் உட்பட இருவர் கைது

Aarani Editor
1 Min Read
Ammunition Seizure

வவுனியா – போகஸ்வெவ சலினிகம கிராமத்தில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது வீட்டில் கேரள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த வீட்டை மேலும் சோதனை செய்த போது, துப்பாக்கி ரவைகள் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வீட்டிலிருந்து ரி-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 296 ரவைகள், 12-போர் வகையை சேர்ந்த 27 ரவைகள், எம்-16 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 19 ரவைகள், ரி-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகளின் தொகுப்பு, ரி-56 துப்பாக்கிப் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 124 பயிற்சி ரவைகள், 9 மில்லிமீற்றர் தானியங்கி கைத் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 365 வெற்று ரவைகள் மற்றும் 24 பயன்படுத்தப்பட்ட ரி-56 வெற்று ரவைகள் என்பன மீட்கப்பட்டன.

அவற்றுடன் இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை சீருடைகள், அதற்கான பிரத்தியேக பொருட்கள், காலணிகள், கால்சட்டை, தொப்பிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

பொலிசாரின் விசாரணைகளில் வீட்டின் உரிமையாளர் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை வீரர் என்பதும், அவர் குறித்த பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளரான சிறப்புப் அதிரடி படை வீரரும், பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *