கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அவரை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முன்னிலையில் இன்றைய தினம் இரண்டாவது முறையாக பிரசன்னமாகவுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவராக, உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன செயற்படகின்றார்.
அத்துடன், நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏகநாயக்க ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் இந்த குழுவில் முதல் முறையாகக் கடந்த 19 ஆம் திகதி பிரசன்னமான தேசபந்து தென்னக்கோன், அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்த நிலையில், குறித்த குழுவினால் அவை நிராகரிக்கப்பட்டன.
அதன்போது, அவருக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரமும் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தேசபந்த தென்னகோன் இன்றைய தினம் அந்த குழுவில் முன்னிலையாகி, குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
