பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பான முறைப்பாடு ஒன்றை சட்டத்தரணி நலின் சம்பத் குமார இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்தார்.
கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி குறித்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும், அவற்றில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் இருந்ததாகவும் தயாசிறி ஜயசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கூறி இருப்பதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், அவர்களிடம் நம்பகமான விபரங்கள் இருக்குமாக இருந்தால் அவை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என சட்டத்தரணி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளார்.
அதன் பின்னர் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
