அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று கேகாலையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்” முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி “முளைப்பதற்கு இடமளிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முறை உலக சுற்றாடல் தினத்தில் பல சாதகமான நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், பந்துல பெத்தியாவின் வாழ்விடமானது சரணாலயமாக அறிவிக்கப்படல், நில்கல உள்ளிட்ட புதிய வனப்பகுதிகள் குறித்த நான்கு வர்த்தமானிகளை வெளியிடல், சூழல் நேய மாதிரிப் பாடசாலைகள் மற்றும் பசுமைப் புகையிரத நிலையங்களை பாராட்டல் என்பன இடம்பெற்றன.
Link: https://namathulk.com
