தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களின் காணிகளுக்குள் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக் காணிகள் மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை தடுப்பதற்காகவே தெற்கிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்களை அழைத்து போராட்டம் செய்ய ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த தையிட்டி பிரதேசத்தில் யாருக்கும் தெரியாமல் தனியார் காணிக்குள் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டது யாவரும் அறிந்தது.
மக்களுடைய காணிகளை அடாத்தாக பிடித்து யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்ட விகாரைக் காணிகளை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக மக்களின் ஆதரவோடு இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.
அபிவிருத்தி குழு கூட்டங்களில் குறித்த விகாரை தொடர்பாக பலமுறை பேசியுள்ள நிலையில் அந்த விகாரை அமைக்கப்பட்டது சட்ட விரோதம் எனப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு நிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை மக்களிடமே வழங்குமாறு கோரி போராட்டம் இடம்பெற உள்ள நிலையில் அதனை குழப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது சட்டரீதியாக குறித்த காணிகள் அந்த மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை தடுப்பதற்கு தெற்கில் இயங்கும் சில சக்திகளின் ஏற்பாட்டில் எமக்கு எதிராகவும் விகாரைக்கு ஆதரவாகவும் போராட்டம் இடம்பெற உள்ளதாக அறிகிறோம்.
விகாரை அமைந்துள்ள காணியை மக்களுக்கு மீள வழங்க வேண்டும் என ஜனநாயக வழியில் ஆரம்பித்த காணி உரிமைக்கான போராட்டம் வெற்றி பெறுவதை விரும்பாத சில சக்திகள் குழப்பத்தை விளைவிக்க முயலுகின்றன.
எமது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் தனியார் காணிகளை உரிமையாளர்களுக்கு தெரியாமல் விகாரைகள் அமைப்பதற்கு அனுமதிப்போம் ஆனால் தொடர்ந்து எமது நிலங்கள் அபகரிப்பு தொடரும்.
ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ள தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை, திசை திருப்பும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்தை முறியடிக்க கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்று திரளமாற அழைப்பு விடுத்துள்ளார்.
Link: https://namathulk.com
