பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை அரசாங்கம் பலவீனப்படுத்துவதாக குற்றச்சாட்டு

Aarani Editor
1 Min Read

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை முழுமையாக பலவீனப்படுத்தி ஆணைக்குழுவின் அதிகாரங்களை நிதியமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு பொறுப்பாக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக முறியடிப்போம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள மின்சார சபை திருத்தச் சட்டமூலத்தில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை முழுமையாக பலவீனப்படுத்தும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் அதிகாரங்களை நிதியமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு பொறுப்பாக்கும் முயற்சிகள் இந்த சட்டமூலத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்கட்டண தீர்மானத்தில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீன தலையீடு தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டது.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் கொண்டு வரும் யோசனையை கொண்டு வந்தேன். இந்த யோசனைக்கு நிதியமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

எரிபொருள் ஊடாக கிடைக்கும் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே நிதியமைச்சு கட்டண நிர்ணயத்துக்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பிரதிபலனை இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜுன் மற்றும் ஜுலை மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை மொத்த கணக்கு முறைமை ஊடாக மின்கட்டணத்தை முறையற்ற வகையில் அதிகரித்துக் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது.

தற்போது மின்கட்டண திருத்தத்துக்கு இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள வருமான விபரங்களில் வரவுக்கும், செலவுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை அதிகளவில் இலாபமடைந்துள்ள நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன.

இவை குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *