இலங்கை சுங்கத்தில் இருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்லன்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்காமல் இருக்கிறது.
இந்த கொள்கலன் விடுவிக்கப்பட்ட விடயத்தை அரசியல்வாதிகள் யாரும் வெளிப்படுத்தவில்லை.
மாறாக சுங்க தொழிற்சங்கமே இது தொடர்பில் ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அதில் கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இனம் காணப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்தே இதுதொடர்பில் ஏனைய தரப்பினருக்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதை தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com
