மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் நடவடிக்கையானது மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறும் செயற்பாடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்,
தற்போதைய அரசாங்கம் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்குத் தவறியதன் விளைவாகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தினால் குறைக்க முடியுமெனக் கூறினார்.
அதற்கமைய ரூ.9000 இல் இருந்து ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைப்போம் என்றார்.
பின்னர், பொதுத் தேர்தலில் அக்கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டி 159 ஆசனங்களை தனதாக்கிய சந்தர்ப்பத்திலும் கூட மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைத்திருக்க வேண்டும்.
ஆனால் அது நடக்கவில்லை.
நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி, ஜனாதிபதியே தான் வெளியிட்ட அறிக்கைகளை பொய்களாக மாற்றும் வகையில்,
மின்சாரக் கட்டணத்தை 15சதவீதத்தால் அதிகரிக்க தற்போது இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
Link: https://namathulk.com
