சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ளதை போன்று ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்படாத கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் அதிகாரியொருவரும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த பட்டியல் மீண்டும் ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக சகல சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
அப்படியாயின் சிறைக்கைதியொருவரின் பெயரை அந்த பட்டியலுக்குள் இரகசியமாக உள்ளடக்குவதென்றால் நான்கு பேர் அதில் சம்பந்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சிறைச்சாலை பணிப்பாளர் ஆகியோராகும்.
இதில் சிறைச்சாலைகள் பணிப்பாளர் குறிப்பிட்ட பெயரை உள்ளடக்கியிருந்தால் அவரை கைது செய்யலாம்.
ஆனால் சிறைச்சாலைகள் ஆணையாளரும் இதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் இதில் தொடர்புபட்டிருந்தால் அவருக்கும் மேலுள்ள ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் பொறுப்பு கூற வேண்டும்.
இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளரை கைது செய்வதென்றால் அதேபோன்று ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும் என உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
Link: https://namathulk.com
