இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தற்போது இந்த அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தகவலை ஈரானிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
மற்றொரு உயர் காவல்படை அதிகாரியும், இரண்டு விஞ்ஞானிகளும் மரணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே மறுஅறிவித்தல் வரை, ஈரான் வான் பரப்பு மூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரித்துவரும் பதற்றநிலையை அடுத்து ஈரான் இவ்வாறு தமது வான் பரப்பை மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏலவே இஸ்ரேல் வான் பரப்பும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
10சதவீதம் வரை மசகு எண்ணெய்யின் விலை உயர்வடைந்துள்ளது.
இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.85 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.05 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.59 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
Link: https://namathulk.com
