முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மனு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடக அமைச்சராகப் பதவி வகித்த போது தனது தனிப்பட்ட கையடக்க தொலைபேசியின் 240,000 ரூபாய் கட்டணத்தை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியிலிருந்து செலுத்தி அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் முன்னிலையான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமடைந்துள்ளதால் வழக்கு விசாரணைக்கு வேறொரு திகதியை வழங்குமாறு கோரப்பட்டது.
இந்த வழக்கு 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டமையால் வழக்கு விசாரணைக்கு ஒரு குறுகிய கால இடைவெளியை வழங்குமாறு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறியமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
