தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து முறையான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைந்த உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து கல்வி அமைச்சு முறையான ஆய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிறுவனங்களில் கல்வியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் தகுதிகள், குறிப்பாக இலங்கை ஆசிரியர் சேவையில் நியமனம் பெறுவதற்கான தகுதி மற்றும் பொருத்தப்பாடு தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய ஆசிரியர் நியமனங்கள் முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டதாக தெளிவுபடுத்தினார்.
எனினும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை தற்போது கல்வி அமைச்சின் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கான நியமனங்கள் இந்த தர ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com
