சைகை மொழியை தேசிய மொழியாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் விசேட தேவையுடையோருக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
விசேட தேவையுடையோருக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் விசேட தேவையுடையோருக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, விசேட தேவையுடையோர் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி குறித்த முன்னணியின் பிரதிநிதிகள் சபாநாயருக்கு விளக்கமளித்தனர்.
இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பார்வைக் குறைபாட்டைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இதன்போது சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
மேலும், விசேட தேவையுடையோருக்கான, பாராளுமன்ற ஒன்றியத்தை அமைப்பதற்கான முன்மொழிவை பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
எனவே, குறித்த ஒன்றியத்தைக் கூடிய விரைவில் அமைக்க முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
அத்துடன், பல ஆண்டுகளாக விசேட தேவையுடையோரை பாதித்துவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.