தாய்லாந்து உபோன் இராஜதானியின் பிரதான பௌத்த தேரர் உபோன் பிராகா வஜ்ஜிரகூன் தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய தூதுக்குழுவினர் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர்.
தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவை தெரணியகல வேரப்பல்ல ஸ்ரீ அபிநவாராம புராண விகாரையின் விஹாராதிபதி அவிஸ்ஸாவேல்லே வக ஸ்ரீ வஜ்ஜிரவங்ஷ தேரர் இங்கு சமர்பித்தார்.
அதற்கமைய, இலங்கையில் 25 பிக்கு மாணவர்களுக்கு 125 இலட்சம் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில் வழங்குதல், உலக பௌத்த நிலையத்தை இலங்கையில் அமைத்தல், இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு தாய்லாந்துப் பிரஜைகளை இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள வைத்தல், இராஜதந்திர ரீதியாக இந்நாட்டு அரசங்கத்தின் தலையீட்டில் தாய்லாந்தில் இவ்வாண்டில் வெசாக் பண்டிகையை நடத்துதல் ஆகிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்ததுடன், பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு வழங்கும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தேவையான இராஜதந்திர ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com