இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர்கள் நியமனம்.

Aarani Editor
1 Min Read
நியமனம்

இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர்களாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 78 ஆவது ஆண்டைக் குறிப்பதாகவும், மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச்சங்கம் இலங்கை மற்றும் அவுத்திரேலியாவுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கான ஊக்கியாகச் செயற்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் பரந்துபட்டு காணப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது அவுஸ்திரரேலியா அரசாங்கம் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவிற்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு கௌரவ சபாநாயகருக்கு நன்றி தெரிவித்த, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர் இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையையும் வெளியிட்டார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *