வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஆசிரியர் இடமாற்றம், பாடசாலைகளில் பெற்றோர்களிடம் பணம் அறவிடுதல், பாடசாலை சுகாதாரம், ஆசிரியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் என பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான சுந்தரலிங்கம் பிரதீப் , ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கல்வி வலயத்தின் உள்ளக இடமாற்றம் 2 ஆண்டுகளாக முன்னெடுக்கப்படவில்லை என ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், இடமாற்றச் சபையைக் கூட்டுவதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பதிலளித்தார்.
அதேநேரம் இடமாற்றச் சபையில் சட்டரீதியான சங்கங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை தேசிய இடமாற்றக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக செயற்பாடுகளை இலகுவாக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆலோசனை முன்வைத்தார்.
இலங்கையின் ஏனைய மாகாணங்களில், மாகாணத்துக்குள்ளான மாவட்டங்களின் பரம்பல் சீராக உள்ளது எனவும், வடக்கு மாகாணத்தில் அவ்வாறானதொரு நிலைமை இல்லாமையால் தேசிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது யாழ்ப்பாணத்தின் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வன்னிப் பிராந்தியத்தில் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படாத நிலைமை காணப்படுவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளரும் , பணிப்பாளரும் பதிலளித்தனர்.
இடமாற்றங்களின்போது அரசியல் தலையீட்டுக்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் சுயாதீனமாகச் செயற்படுமாறும் அவ்வாறு செயற்படும்போது, அதற்கு செயற்பாட்டுக்கு பக்கபலமாக இருப்பதாகவும் பிரதியமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
சேவையின் தேவை கருதிய இடமாற்றங்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இங்கு குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் மலசலகூட வசதிகள் உரியவாறு இல்லை என்றும், பெண்பிள்ளைகள், பெண் ஆசிரியர்கள் இதனால் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் குறிப்பிட்டார்.
அத்துடன் சில பாடசாலைகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட விடுதிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர் சேவைச் சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். அவற்றை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கமளித்தார்.
இருப்பினும் விரைந்து அதனை முடிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
வலயக் கல்வி அலுவலகம், மாகாண கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு என்பவற்றில் கொடுக்கப்படும் கடிதங்களுக்கு ஏற்பு கடிதம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தேவையற்ற நிர்வாக தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டது.
Link : https://namathulk.com