உத்தரவாத விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதாகவும், விவசாயிகளை போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர், சுன்னாகம் ஏலாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார்.
நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்வதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இம்மாற்றத்தினாலேயே ஜனாதிபதி தேர்தலிலும், பொது தேர்தலிலும் அவர்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தார்கள் என கூறினார்.
அத்துடன்,நாட்டில் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் இனங்கள் இருப்பது அரசாங்கத்திற்கு பெரும் பலமாக இருப்பதுடன் அது எமது நாட்டிற்கு ஒரு தனித்துவத்தையும் பெற்றுத் தரும் பெறுமதியான அம்சம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
முன்னைய அரசாங்கங்கள், எந்த விஞ்ஞானபூர்வமான அடிப்படையும் இல்லாமல் அமைச்சுக்களை பிரித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
எனவே இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல், விஞ்ஞானபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்நாட்டு கல்வி முறையினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், இந்த முறையை மாற்றி அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.




Link: https://namathulk.com