தற்போதைய அரசாங்கத்தினால் கல்வித்துறைக்கு அதிகளவிலான முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
இதனடிப்படையிலேயே, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அதிகளவிலான நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
அத்துடன், நேற்றை பாராளுமன்ற அமர்வின் போது, ஆசிரியர் சேவை இடமாற்றம் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி, இலங்கை ஆசிரியர் இடமாற்ற சபையினால் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தை பொருத்தவரையில் பெருமளவிலான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இதனால், ஆசிரியர்களுக்கான இடமாற்றமும் கேள்விக்குறியான ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவில் உள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கு இன்று களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி, வற்றாப்பளை மகாவித்தியாலயம், தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குழுவினர் பாடசாலையில் நிலவும் பற்றாக்குறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தனர்.
இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசு நிரந்தர தீர்வு வழங்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில், 30ஆயிரம் அரச ஊழியர்களை ஆட்ச்சேர்ப்பு செய்வதற்காக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்க செயலாளர், ஆசிரியர் சேவையில் மட்டுமே 30 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாக கூறியிருந்தார்.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால், ஆசிரியர் இடமாற்றம் என்பதும் கேள்விக்குறியான ஒன்றாக மாறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com