தனித்தனியாக போட்டியிட்டு, பின்னர் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதை, சரியான விதத்தில் புரிந்துகொள்ளாமல், தமிழரசுக் கட்சி பிரிந்துவிட்டதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் M.A சுமந்திரன் தெரிவித்தார்.
உடுப்பிட்டி தொகுதி கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் வடமராட்சி கிளை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக தொகுதி அடிப்படையிலான கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருப்பதாகவும் பொதுச் செயலாளர் கூறினார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் 17 சபைகள் உள்ளன, இந்த சபைகள் அமைந்துள்ள வெவ்வேறு தொகுதிகளில் கலந்துரையாடி, அதன்பின்னர் மாவட்ட கிளையில் இதுகுறித்து பேசி சில முடிவுகளை எடுக்கவேண்டிய தேவை உள்ளதாகவும் எம்.எ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
மேலும், இது தொடர்பில் கடந்த வாரத்தில் மாவட்ட கிளையில் தீர்மானம் எடுத்ததாகவும், அதன்படி ஒவ்வொரு தொகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொதுச் செயலாளர் கூறினார்.
ஆனால், இந்த தேர்தல் முறையை கருத்தில் கொண்டு தனியாக ஒரு கட்சி ஆட்சியமைப்பது மிகவும் கடினமான விடயம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய பொதுச் செயலாளர், இவ்விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த தேர்தலை எவ்வாறு, தமக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய வேண்டிய தேவை உள்ளதாகவும் பொதுச்செயலாளர் M.A சுமந்திரன் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com