முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் உள்நாட்டு போர் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும், தமது உறவுகளை இழந்த வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்கள் ஒரு முறையாவது அவர்களை பார்த்து விடமாட்டோமா என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, கிளிநொச்சி, கந்தசுவாமி கோவிலின் முன் 2017 பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டமானது வடக்கு, கிழக்கெங்கும் விரிவடைந்தது.
ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், இதுவரையிலும் காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், காணாமலாக்கப்பட்ட உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 8 வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீச்சட்டியை ஏந்தியவாறு கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலின் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு ஏ-9 வீதியூடாக டிப்போசந்திக்கு சென்று போராட்டம் நிறுத்தப்பட்டது.
இதன்போது, இலங்கையில் ஆட்சி மாறினாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி இதுவரையிலும் கிடைக்கவில்லையெனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.
Link : https://namathulk.com