புதிய அரசாங்கம் பதவியேற்று அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, விவசாயம், தொழில்நுட்பம், சுகாதாரம் என அனைத்து துறைசார்ந்த சீர்த்திருத்தங்களையும் ‘க்ளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டத்தின் ஊடாக செய்து வருகின்றது.
இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, இந்த வேலைத்திட்டத்தை பாடசாலை மட்டங்களுக்கு கொண்டு செல்லும் வகையில், ஆயிரம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பாடசாலைகளில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
‘எமது பாடசாலையை சுத்தம் செய்வோம், நாட்டை கட்டியெழுப்பும் தலைமுறையின் முன்னோடியாக நாம் இருப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், குறித்த பாடசாலையின் அதிபர் உட்பட பாடசாலை சமூகத்தின் தலைமையில் செயற்படுத்தப்படுகின்றது.
இந்த நோக்கத்தை செயற்படுத்த தேவையான மனித வளத்தையும், தொழில்நுட்ப அறிவையும் முப்படைகளின் உறுப்பினர்கள் வழங்குகிறார்கள்.
அதன்படி, பாடசாலைகளில் உடைந்த மேசைகள், நாட்காலிகள், உபகரணங்கள், மின் கட்டமைப்புகள் மற்றும் நீர்குழாய் கட்டமைப்புகளில் அத்தியாவசிய பழுதுபார்ப்புகளும் செய்யப்படுவதோடு, பாடசாலை முழுவதும் தூய்மைப்படுத்தப்படும்.
இதன் முதல் கட்டமாக இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் 100 பாடசாலைகளிலும், கடற்படையின் பங்களிப்புடன் 50 பாடசாலைகளிலும், விமானப்டையின் பங்களிப்புடன் 50 பாடசாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும்.
அத்துடன், மார்ச் மாத இறுதிக்குள் இந்த வேலைத்திட்டத்தை 1,000 பாடசாலைகளில் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களை பங்கேற்க செய்வது சிறப்பம்சமாகும்.
பாடசாலைகளை சுத்தம் செய்வதோடு நிறுத்திவிடாமல், அதனை தொடர்ந்து பாராமரிப்பதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த வேலைத்திட்டத்தில், நேற்று மே/கொ/மஹவத்த புனித அந்தோணியார் சிங்கள கல்லூரியில் இலங்கை விமானப்படை வீரர்களின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டதோடு, இதற்கு இணையாக ஏனைய 199 பாடசாலைகளில், வலயக் கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதிநிதிகளின் தலைமையில் செயற்படுத்தப்பட்டது.
Link : https://namathulk.com