‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவிற்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் அம்பலமாகியது.
இதன்படி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கான உப குழுவொன்றை நியமிப்பதற்கு கோப் குழு தீர்மானித்துள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தலைமையில் நேற்றையதினம் கூடியது.
கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்களைக கோப் குழு முன்நிலையில் அழைத்து விசாரணைகளைத் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடியான செயற்பாடுகள் பல வெளிப்பட்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக கோப் உபகுழுவொன்றை நியமிக்க குழுவின் தலைவர் தீர்மானித்தார்.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சியின் தலைமையில் கௌரவ உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ன, சுனில் ராஜபக்ஷ, அசித நிரோஷன எகொட விதான மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரை கொண்டதாக கோப் உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த உபகுழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
Link : https://namathulk.com