தற்போது, நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்களுக்கெதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்திருந்தார்.
அத்துடன், குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை அடையாளம் காண்பதில், பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ்சிலிருந்து 123 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சில் பெல்மடுல்லைக்கும் ஓபநாயக பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏறிய நபர் ஒருவரின் கைவிடப்பட்ட பை ஒன்றில் இருந்து 9 mm ரக தோட்டாக்கள் 113, T56 ரக தோட்டாக்கள் 9, 84S ரக தோட்டா ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ்சில் பயணித்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி பொலிசாருக்கு கொடுத்த தகவலுக்கமையவே இவ்வாறு துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல, பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதிப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் பண்டாரவளை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com