நல்லாட்சி அரசாங்க காலத்தில் முழு நாட்டை மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த ஒரு விடயமாக இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் காணப்பட்டது.
இலங்கை வரலாற்றில் வங்கித் துறையில் ஏற்பட்ட பாரிய மோசடியாகவே இது கருதப்பட்டது.
இந்த மோசடி வழக்கு தொடர்பில் அப்போதைய பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலமும் வழங்கியிருந்தார்.
எனினும், அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்டவரும், ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவுமாகிய அர்ஜுன மகேந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகவில்லை.
இந்நிலையில் அர்ஜுன மகேந்திரனுக்கு நீதிமன்றத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்த முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது 2015ஆம் ஆண்டு 10 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைக்கு சவாலாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது.
Link : https://namathulk.com