கோட்டா கோ கம போராட்ட காலப்பகுதியில் சூனியக்காரி ஞானாக்கா தொடர்பில் பரவலாக பேசப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கான மந்திர தந்திரங்களை புரியும் மாய வித்தைக்காரி ஞானாக்கா என சமூக வலைதளவாசிகள் கிசுகிசுத்தனர்.
இந்த பின்னணியில் அரகலய போராட்டம் வலுபெற்றபோது ஆட்சியாளர்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதன்போது அநுராதபுரத்திலுள்ள ஞானாக்காவின் பூஜை செய்யும் கட்டடமும், வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.
இதற்காக 280 மில்லியன் ரூபா நட்டஈட்டை ஞானாக்கா பெற்றுக்கொண்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நபர்களுக்கு நட்டஈடாக கடந்த அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு நட்டஈடாக வழங்கப்பட்ட 1,221 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாகவே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.