தமிழக மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Aarani Editor
2 Min Read
மீனவர்களின் போராட்டம்

தங்கச்சிமடத்தில் இன்று நடைபெற இருந்த மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் மீன்பிடி விசைப்படகுகளையும், எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை துரிதப்படுத்தி மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மீனவர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கி இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது.

மீனவர்களின் ஐந்தாவது நாள் போராட்டமான இன்று தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து தங்கச்சிமடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் அதிகளவு வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் கருவி உள்ளிட்டவற்றுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில், மீனவர்கள் போராட்ட குழு நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் நேற்று இரவு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இலங்கை கடற்படை வசமுள்ள மீன்பிடி படகுகளுக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீட்டு தொகையை 6 லட்சத்தை உயர்த்தி 8 லட்சமாக வழங்கப்படும் எனா அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட மீனவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350 உயர்த்தி ரூ.500 ஆக வழங்கப்படும் எனவும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மத்திய அமைச்சரை மீனவர் குழு சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளுக்கு அமைய, மீனவர்கள் இன்று நடத்த இருந்த தீக்குளிக்கும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றுடன் எட்டாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *