நிகழ்நிலையில் சந்தித்தனர் அநுரவும், ஜோர்ஜிவாவும் : பேசியது என்ன?

Ramya
By
3 Min Read
நிகழ்நிலையில் சந்தித்தனர் அநுரவும், ஜோர்ஜிவாவும் : பேசியது என்ன?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு நேற்று நடைபெற்றது.

2023 மார்ச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு அமைவான ஒப்பந்தம் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

பொருளாதார மறுசீரமைப்பை செயற்படுத்தல், பேரண்ட பொருளாதார ஸ்திரத் தன்மையை வலுப்படுத்தல், அபாயத்தை எதிர்நோக்கக்கூடிய தரப்பினருக்கு உதவுதல் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை அடைந்திருக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் முகாமைத்துவ பணிப்பாளர், சிரேஷ்ட முகாமைத்துவம் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழுவினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

உலக பொருளாதார ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிக்கொள்ளும் நிலையுடையதாக மாற்றுவதற்கு இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை முழுமைப்படுத்தல் மற்றும் பிணைமுறி பரிமாற்றம் மற்றும் கடன் மறுசீரமைப்பை சாதகமான முறையில் நிறைவு செய்தமை தொடர்பில் ஜோர்ஜிவா ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறினார்.

முக்கிய மறுசீரமைப்பை முன்னெடுக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முகாமைத்துவ பணிப்பாளர் பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையின் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக உலக ஸ்திரமற்ற தன்மையின் உயர்வு, உலக பொருளாதார முன்னேற்றத்தின் மந்த நிலை மற்றும் உலக கடன் மட்டத்தின் உயர்விற்கு மத்தியில் நல்லாட்சி கட்டமைப்புடன் பேரண்ட பொருளாதார நியதிகளையும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜோர்ஜிவா வலியுறுத்தினார்.

இலங்கை மக்களின் வலுவான ஆணையை பிரதிபலிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லவற்கும், இணக்கம் காணப்பட்ட இலக்குகளை மக்களின் விருப்பத்துக்கு அமைய அடைந்துகொள்வதற்குமான தயார்நிலையை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்காக வறியவர்களின் முன்னேற்றத்துக்கு தேவையான பொறிமுறையை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நலன்புரிச் செலவுகளை வலுப்படுத்தல் போன்றன அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் விடயங்களாக உள்ளன என்பதையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மின்சார துறை உள்ளிட்டவற்றில் சரியான நிர்வாகம் மற்றும் செலவு – மீளமைத்தல் விலை நிர்ணயத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில் முனைவுகளை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்தார்.

கடன் அச்சுறுத்தலை குறைத்தல் மற்றும் நிலையான மற்றும் பேரண்ட அபிவிருத்தியை மேம்படுத்த பலதரப்பு கூட்டிணைவுகளின் நேரடி வௌிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள மீளாய்வுகளை சாதகமாக நிறைவு செய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி இதன்போது கிரிஸ்டலினா ஜோர்ஜிவாவிடம் உறுதிப்படுத்தினார்.

எதிர்காலத்தை பார்க்கும்போது, இலங்கையை நிலையான மற்றும் சமநிலையான அபிவிருத்தியை நோக்கி தீர்மானம் மிக்க வகையில் நகர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை பின்வாங்காமல் செயற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜோர்ஜிவா இதன்போது வலியுறுத்தினார்.

குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் உலக அரசியலின் துரித வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிலையான வகையில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் செயற்பாடுகளின் சவால்மிகுந்த தன்மையை அவர் ஏற்றுக்கொண்டதோடு, இலங்கையின் நிலையான பங்குதாரராக சர்வதேச நாணய நிதியத்தின் வகிபாகத்தையும் ஜோர்ஜிவா தௌிவுபடுத்தினார்.

அனைத்து துறைகளும் உள்ளடங்கும் அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலுக்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் தயாராக இருப்பதையும் ஜோர்ஜிவா உறுதிப்படுத்தினார்.

இலங்கை நிலைப்பேறான ஸ்திரதன்மையை அடைந்துகொள்வது தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளருக்கு இடையில் இதன்போது இருதரப்பு ரீதியான இணக்கம் எட்டப்பட்டது.

செழுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுதல் மற்றும் அன்னியோன்னியமாக செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *