யாழ் மாவட்டத்தில் அனுமதி பெற்றுக்கொண்ட போர்வையில், விதிகளை மீறி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்தை இறுக்கமான முறையில் அமுல்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுற்றாடல் தொடர்பான கலந்துரையாடலின் போது பிரதேச செயலாளர்களின் முன்வைக்கப்பட்ட அத்துமீறிய ஒலிபெருக்கி பாவனை தொடர்பான முறைபாடுகளுக்கே அவர் இவ்வாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதன்போது, யாழ் மாவட்டத்தில் ஆலயங்கள் வீடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் வீதிகளில் இடம்பெறும் களியாட்டம் நிகழ்வுகளில் எல்லை மீறிய சத்தத்தில் ஒலிபெருக்கி பாவனை இடம்பெற்று வருவதாக பொதுமக்களால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக பதில் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் வாரங்களில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெற உள்ள நிலையில் இவ்வாறு அத்துமீறிய ஒலிபெருக்கி பாவனைகளை அனுமதிக்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.
மேலும், ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற நிலையில் பொலிசார் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கூறினார்.
அதேவேளை, இனிவரும் காலங்களில் ஒலிபெருக்கி பாவனை தொடர்பில் கிராம சேவையாளரிடம் அனுமதிக்காக வருபவர்களிடம் சட்ட ஏற்பாடுகளை எழுதி அனுமதி கடிதங்களை பொலிசாருக்கு சிபாரிசு செய்யுமாறு கோரியத்துடன் சகல பிரதேச செயலாளர்களும் பிரதேச மட்டத்தில் ஒலிபெருக்கி பாவனையாளர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்துமாறும் பதில் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
விரைவில் யாழ் மாவட்டத்தில் அத்துமீறிய ஒலிபெருக்கி பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை செயல்படுத்துவதற்கு வட மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபருடன் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பதில் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
link: https://namathulk.com