உயர் கல்வி நிறுவனங்களின் பட்டங்கள் நெறிப்படுத்துவதில்லை – அவதானம் தேவை என கல்வி அமைச்சு அறிவிப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் கற்றல் விடயங்களை எதிர்பார்க்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, பட்டப்படிப்பு நிகழ்ச்சிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் தொடர்புபட்ட உயர் கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படும் பட்டங்களை கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நெறிப்படுத்துவதில்லை என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவ்வாறான நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் இணைய விரும்பினால், முடிவொன்றை எடுப்பதற்கு முன்னர் பின்வரும் விடயங்களை சரிபார்த்து உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
1.புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கை அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் : உள்ளுர் நிறுவனம் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கிடையே செல்லுபடியான உடன்படிக்கை ஒன்று தற்போதுள்ளதா என்பதனை சரிப்பார்த்தல்.
2.வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம்: பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் ஆண்டுப் புத்தகம் அல்லது உலக உயர் கல்வி தரவுத் தளத்தில் குறித்த வெளிநாட்டு பல்கலைக்கழகம் உள்ளதா என்பதனை உறுதிச் செய்யதல்.
3.போதுமான வசதிகள்: நிகழ்ச்சியை திறம்பட வழங்க உள்ளுர் நிறுவனத்தில் போதுமான வசதிகள் இருப்பதை உறுதி செய்தல்.
4.மாணவர் பதிவு: உள்ளுர் நிறுவனம் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை நேரடியாக பதிவு செய்வதற்கு வசதி செய்கிறதா என்பதை சரிபார்த்தல்.
மேலும், 1978ஆம் ஆண்டு 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் பிரிவு 25A இன் கீழ் உயர் கல்வி பாடத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களின் உத்தியோகபூர்வ பட்டியலானது www.mohe.gov.lk எனும் இணையத்தள முகவரியில் கிடைக்கப்பெறும் என கல்வி அமைச்ச குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மேல் வழங்கப்பட்ட படிநிலையை பின்பற்றி 2025.02.28 ஆம் திகதி வரையான அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு நிகழ்ச்சிகளின் விபரங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் தரவிறக்கம் செய்ய முடியுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com