சிம்பொனி இசையில் இளையராஜாவின் பெருமைகளை உலகமே வியந்து பேசிக்கொண்டிருக்கிறது. பண்ணைபுரத்திலிருந்து இன்று உலக மேடைவரை இவரது பெருமைகள் வரலாறு, இசையோடு சேர்த்து முழங்கிக் கொண்டிருக்கிறது.
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா இன்று சிம்பொனி வரை இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
சிம்பொனிஎன்பது மேற்கத்திய பாரம்பரிய இசை மரபில், பல்வேறு வகையான இசைக் கருவிகள் ஒன்றாக இணைந்து இசைக்கப்படும் ஓர் தொகுப்பாகும்.
ஐரோப்பிய மேற்கத்திய பராம்பரிய இசையான சிம்பொனி 1732 – 1809 வரையான காலப்பகுதியில் தோற்றம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஜோசப் ஹைடன் இதன் தந்தையாக அறியப்படுகிறார். இவரின் மாணவர்களே உலகம் நன்கறிந்த பீத்தோவன் மற்றும் வோல்ப்காங் அமடேயுஸ் மொசார்ட் ஆகியோர்.
சிம்பொனி இசையானது பல இசைக் கருவிகளை ஒன்று சேர்த்து, நீண்ட, அடர்த்தியான அடுக்குகள் கொண்ட இசைக் கோர்வையாக உருவாகிறது.
மெல்லிய இசையுடன் தொடங்கும் சொனாட்டா, மெதுவாக ஒன்றுசேர்ந்து இசையின் கோர்வையில் இணையும் ஸ்லோ, இசையின் மையத்தைத் தொடும் ஸ்காட்ஸா மற்றும் உச்ச நிலைக்குப்போய் அடங்கும் ‘சொனாட்டா – ரொண்டோ பார்ம் என நான்கு பகுதிகளாக சிம்பொனி வரையறுக்கப்படுகிறது.
ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள்வரை இருக்க வேண்டும். 18 – 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 – 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும்.
ஜோசப் ஹெய்டன், மொஸார்ட், பீத்தோவன் என அடுத்தடுத்து வந்த இசை மேதாவிகள் சிம்பொனியின் வடிவத்தை மேம்படுத்தி இசைக்கோர்வைகளை ஆழமாகவும், அடர்த்தியாகவும், பெரும் உணர்ச்சிமிக்கதாகவும், புதுமைமிக்கதாகவும் மாற்றிக் கொண்டே வந்தனர்.
இளையராஜாவுக்கு 1986ம் ஆண்டு முதல் சிம்பொனி இசையை அரங்கேற்ற வேண்டும் என்பது மாபெரும் கனவு.
மேற்கத்திய இசையுடன் இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசை ஆகியவற்றை இணைத்து 1986ஆம் ஆண்டில் ‘ How to Name It?’, மற்றும் 1988 ஆம் ஆண்டில் ‘Nothing but Wind’ எனும் இசைத் தொகுப்புக்களை வெளியிட்டிருந்தார். 2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு இணைத்து வெளியிட்டார்.
நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்குத் தனித்தனியாக இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுப்பது என்பது சிம்பொனியை உருவாக்குவதில் இருக்கும் மிகப்பெரிய சவால். ஆனால் இசைஞானிக்கு இதுவே கைவந்த கலை!
இளையராஜாவின் இந்த மாபெரும் கனவு, 2025ஆம் ஆண்டின் மார்ச் 08ஆம் திகதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு மாபெரும் வரலாற்றைப் படைத்தது.
வரலாற்றின் சிறப்புக்களையுடைய இலண்டன் மாநகரின் அப்பல்லோ அரங்கில் மேற்கத்திய – கர்நாடக இசை கலந்து இளையராஜாவால் படைக்கப்பட்ட ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசையை, உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து தொடர்ச்சியாக 45 நிமிட நேரம் இசை முழக்கம் செய்து வரலாற்றைப் படைத்திருக்கிறார் பண்ணை புரத்துக் கதாநாயகன்!
இலண்டன் சிம்பொனி அரங்கேற்றத்தைத் தொடர்ந்து 13 உலக நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு இளையராஜாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் ஆசிய நாட்டவராகவும் தமிழராகவும் இலண்டனில் சிம்பொனியை இசையமைத்து வழங்கிய பெருமைக்கும் சொந்தக்காரராக மாறியிருக்கிறார் ராஜா!
திரைப்பட இசைக்கு மேற்கத்திய பாரம்பரிய இசையின் கூறுகளைப் பயன்படுத்திய இந்தியாவைச் சேர்ந்த முதல் இசையமைப்பாளராகவும், அதே போல் தெற்காசியாவிலிருந்து முழு நீள சிம்பொனியை உருவாக்கிய முதல் இசையமைப்பாளரும் இவராகக் கொண்டாடித் தீர்க்கப்படுகின்றார் இசைஞானி!
Link: https://namathulk.com