இசைக்கு அப்பால் பரந்துபட்ட மிக முக்கிய மைல்கல்லை குறிக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர், பாடலாசிரியர் மற்றும் தொழில்முனைவோர் அலோ பிளெக் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கைக்கு வருகை தந்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோர் அலோ பிளெக்கிற்கு அமோக வரவேற்பளித்தனர்.
இலங்கை முதலீட்டிற்கு ஒரு கவர்ச்சிகரமான இடம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுவதில் ஒரு பங்காளராக இருக்க விரும்புவதாகவும், இலங்கை அரசாங்கத்துடனும் தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆரம்ப கட்ட திட்டங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட இது சிறந்த வாய்ப்பு எனவும் அலோ பிளெக் கூறினார்.
தற்பொழுது காணப்படும் மற்றும் புதிய நிறுவனங்கள் ஆகிய இரு பிரிவுகளும் உள்ளடங்கியதாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் புதிய கருத்துக்களை மேற்பார்வை செய்ய சந்தர்ப்பம் கிடைத்திருப்பது மிகவும் தனித்துவமானது என்று அலோ பிளெக் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்களுடன் தான் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், இலங்கையில் காணப்படும் மூலங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாட தான் எதிர்பார்ப்பதாகவும் அலோ பிளெக் கூறினார்.
இலங்கையில் மூன்று நாள் தங்கியிருக்கும் அவர், உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்களைச் சந்தித்து, கலாசார மற்றும் அறிவியல் துறைகளில் ஒத்துழைப்புகளை மேம்படுத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Link: https://namathulk.com