இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தூதுவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் வலுவான திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
இதன்போது, தடைகளால் பூட்டப்பட்ட பொருளாதாரத்திற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட அளவிலான சுதந்திர இயக்கத்துடன் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், பொருளாதாரத்தில் சுதந்திரமான இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் அபிவிருத்தியை எட்ட முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம், பொருளாதாரத்திற்கு பாரிய அதிர்ச்சியை சந்திக்காத வகையில் தயாரிக்கப்பட்டது எனவும் கூறினார்.
மேலும், பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, ரூபாயின் பெறுமதிக்கு தாங்க முடியாத அழுத்தத்தை வழங்காது இருப்பதை உறுதி செய்வதில் தற்போதைய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின்படி சில முடிவுகள் எடுக்க நேரிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மக்களின் ஒவ்வொரு ரூபாயும் கடவுளின் பணியாகக் கருதி பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், முதலீட்டாளர்கள் எந்தவிதமான தரகுப்பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்குள் மட்டுமல்ல, சர்வதேச சந்தையிலும் இளம் தொழில்முனைவோருக்குத் தேவையான பலத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது முன்மாதிரியான அரசியல் தொடங்கியுள்ளது என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நினைவு கூர்ந்தார்.
எனவே, தற்போதைய அரசாங்கத்தின் முடிவில் அழிவுகரமான அரசியல் மீண்டும் ஏற்படாது எனவும் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
Link : https://namathulk.com