ரோயல் பார்க் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
ரோயல் பார்க் கொலை தொடர்பில், குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் தீர்மானம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தாமை குறித்து விளக்கமளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , ரோயல் பார்க் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்கான காரணத்தை மைத்திரிபால சிறிசேன மன்றுக்கு சமர்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி இழப்பீட்டை தீர்க்கத் தவறிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டு ராஜகிரியவில் உள்ள ராயல் பார்க் வளாகத்தில் யுவோன் ஜான்சன் கொலை செய்யப்பட்டதற்காக, ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது.
Link : https://namathulk.com