பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாமும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹசாரா லியனகே தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது, 1970 முதல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 55 ஆண்டுகளில் உறுதியாக விருத்தியடைந்துள்ள இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வர்த்தகம், முதலீடு, விவசாயம், சுற்றுலா மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வளர்ந்துள்ளது என்பதை சபாநாயகர் வலியுறுத்தினார்.
பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வியட்நாமுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கையின் உறுதிப்பாட்டை சபாநாயகர் மீண்டும் நினைவூட்டினார்.
வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் கௌரவ நுகுயென் டக் ஹை தலைமையிலான வியட்நாம் பாராளுமன்றத் தூதுக்குழு 2025 மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
நட்புறவுச் சங்கத்தின் மறுமலர்ச்சி இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய ஆரம்பமாகும் என இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் வியட்நாம் தூதுவர் வழங்கும் ஆதரவிற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
Link : https://namathulk.com