மௌனம் காலைந்த மாஸ்கோ – தொடரும் அமெரிக்க ரஷ்ய உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தங்களின் விவாதங்கள்

Ramya
By
2 Min Read
அமெரிக்க ரஷ்ய உக்ரைன்

சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் உக்ரைனிற்கும் இடம்பெற்ற யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவராலும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைனின் கூட்டாளிகளை ரஷ்யா ஏமாற்றாது இருப்பதை உறுதி செய்யுமாறு கோரியிருந்த நிலையில், ரஷ்யா மீது அச்சுறுத்தும் கருத்துக்களை ட்ரம்ப் முன்வைத்திருந்த நிலையில் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் வங்கித் துறைகள் மீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

தற்போது ரஷ்யா தனது பெரும் மௌனத்தைக் கலைத்துள்ளது எனலாம்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனில் போர்நிறுத்தம் செய்வதற்கான யோசனையுடன் தான் உடன்படுவதாகக் கூறியுள்ளார். எனினும் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அவர் பல நிபந்தனைகளை முன்வைத்திருந்தார்.

கடந்த வியாழக்கிழமை மாஸ்கோவில் ஒரு செய்தி மாநாட்டில் பேசிய புடின், போர்நிறுத்த முன்மொழிவு குறித்து “யோசனை சரியானது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். ஆனால் நாம் விவாதிக்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன. ஒரு போர்நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் மற்றும் இந்த நெருக்கடியின் மூல காரணங்களை அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் கைப்பற்றியதிலிருந்து சர்ச்சைக்குரிய பிரதேசமாகக் காணப்படும் நிலையில், அப்பகுதியிலுள்ள உக்ரேனியர்களுக்கு சரணடையவும் அல்லது இறக்கவும் மட்டுமே வாய்ப்புக்கள் இருப்பதாக புடின் குறிப்பிட்டார்.

மேலும் அமெரிக்கத் தரப்பினரோடு தாம் ஒரு பேச்சுவார்த்தையை நடத்த விரும்புவதாகவும் குறிப்பிட்ட புடின், “உக்ரேனிய தரப்பு 30 நாள் போர்நிறுத்தத்தை அடைவது நல்லது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், ஆனால் அவற்றில் நுணுக்கங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டு சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

“அந்த 30 நாட்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? உக்ரைன் அணிதிரட்டுவதற்கு? பின்னணி? மக்களுக்கு பயிற்சி அளிக்கிறீர்களா? அல்லது ஒன்றுமில்லையா? அது எவ்வாறு கட்டுப்படுத்தப்படும்? சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்தரவை யார் வழங்குவார்கள்? என்ன செலவில்? 2 000 கிலோமீட்டருக்கும் அதிகமான சாத்தியமான போர்நிறுத்தத்தை யார் உடைத்தார்கள் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? இந்த கேள்விகள் அனைத்திற்கும் இரு தரப்பிலிருந்தும் நுணுக்கமான பங்கேற்புத் தேவைப்படுகிறது. அதை யார் கண்காணிக்கிறார்கள் ” போன்ற பல கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார்.

புடினின் கருத்துக்கள் மற்றும் ஜெலென்ஸ்கியின் கருத்துக்களுக்கிடையேயும், நிலைப்பாடுகளுக்கு இடையேயும் ஒரு தெளிவான பிளவு உள்ள நிலையில் “ரஷ்யாவிடமிருந்து போர்நிறுத்தத்தை நாங்கள் காண விரும்புகிறோம்” என்று ட்ரம்ப் தெரிவித்திருக்கும் கருத்து முக்கியமானது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *